அதிகாரம் / Chapter 10
திருக்குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.
பரிமேலழகர்
நல்லவை நாடி இனி சொலின்-பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும்-அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். விளக்கம் (தேய்தல்: தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்று மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.)
English explanation
Who seeks out good, words from his lips of sweetness flow;In him the power of vice declines, and virtues grow
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.