அதிகாரம் / Chapter 10

திருக்குறள் 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.

பரிமேலழகர்

ஒருவர்க்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல்-ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார்கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல்; பிற அல்ல-அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. விளக்கம் (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், 'பிற' எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.)

English explanation

Humility with pleasant speech to man on earth,Is choice adornment; all besides is nothing worth

Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).