அதிகாரம் / Chapter 88

திருக்குறள் 875

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.

பரிமேலழகர்

தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையோ எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஒருவன் தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. விளக்கம் (பொருந்தியது - ஏனையதனை வேறதற்கு ஏற்றது: அப்பொழுது அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்து கொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.)

English explanation

Without ally, who fights with twofold enemy o'ermatched,Must render one of these a friend attached

He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).