அதிகாரம் / Chapter 57
திருக்குறள் 562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க, நெடிதாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார். இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.
பரிமேலழகர்
கடிதுஓச்சி-அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி; மெல்ல எறிக-செய்யுங்கால் அளவிறவாமல் செய்க; ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர்-ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார். விளக்கம் (கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.)
English explanation
For length of days with still increasing joys on Heav'n who call,Should raise the rod with brow severe, but let it gently fall
Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires wi th strictness, and then punish with mildness.