அதிகாரம் / Chapter 54

திருக்குறள் 534

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை: அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை. இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.

பரிமேலழகர்

அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை; ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. விளக்கம் [நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.]

English explanation

'To cowards is no fort's defence'; e'en soThe self-oblivious men no blessing know

Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).