அதிகாரம் / Chapter 52
திருக்குறள் 519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் விளக்கம்
சாலமன் பாப்பையா
தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.
English explanation
Fortune deserts the king who ill can bear,Informal friendly ways of men his tolls who share
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.
மேலும் தமிழ் உரைகள்
மு. வரதராசனார்
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
மணக்குடவர்
வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்.
பரிமேலழகர்
வினைக்கண் வினை உடையான் கேண்மை-எப்பொழுதும் தன் வினையின் கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற் கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு தீங்கும். விளக்கம் [கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாம் நில்லாது கேளிர் செய்யும் உரிமை எல்லாம் செய்தொழுகுதல் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக் கருதுமாயின், பின் ஒருவரும் உட்பட்டு முயல்வார் இல்லையாம். ஆகவே, தன் செல்வம் கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானை ஆளும் திறம் கூறப்பட்டது.]
கலைஞர் மு. கருணாநிதி
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்