அதிகாரம் / Chapter 5

திருக்குறள் 41

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

பரிமேலழகர்

இல்வாழ்வான் என்பான்-இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை-அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம். விளக்கம் ('இல்' என்பது ஆகுபெயர். 'என்பான்' எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார்; ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத்தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி, நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.)

English explanation

The men of household virtue, firm in way of good, sustainThe other orders three that rule professed maintain

He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.