அதிகாரம் / Chapter 5

திருக்குறள் 42

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.

பரிமேலழகர்

துறந்தார்க்கும்-களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும்-நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவரும் இன்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும்; இல் வாழ்வான் என்பான் துணை-இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணை. விளக்கம் (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.)

English explanation

To anchorites, to indigent, to those who've passed away,The man for household virtue famed is needful held and stay

He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.