அதிகாரம் / Chapter 39
திருக்குறள் 390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம். கொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.
பரிமேலழகர்
கொடை வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும்; அளி - யாவர்க்கும் தலையளி செய்தலும்; செங்கோல் முறை செய்தலும்; குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய; நான்கும் உடையான் - இந்நான்கு செயலையும் உடையான்; வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தார்க்கு எல்லாம் விளக்கு ஆம். விளக்கம் (தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல். செவ்விய கோல் போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' என எடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது, ஆறில் ஒன்றாய பொருள்தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல் வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு' என்றார். ஒளி-ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும் பயனும் உடன் கூறப்பட்டன.)
English explanation
Gifts, grace, right sceptre, care of people's weal;These four a light of dreaded kings reveal
He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.