அதிகாரம் / Chapter 40
திருக்குறள் 391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
பரிமேலழகர்
கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்கத் தக அவை சொல்லுகின்ற நெறிக் கண்ணே நிற்க. விளக்கம் ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிறபொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் "கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்" தலினும், (நாலடி. 250) துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும் நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும் இதனாற் கூறப்பட்டன.)
English explanation
So learn that you may full and faultless learning gain,Then in obedience meet to lessons learnt remain
Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.