அதிகாரம் / Chapter 14

திருக்குறள் 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் விளக்கம்

சாலமன் பாப்பையா

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

English explanation

'Decorum's' true nobility on earth;'Indecorum's' issue is ignoble birth

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.

மேலும் தமிழ் உரைகள்

மு. வரதராசனார்

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

திருக்குறளார் வீ. முனிசாமி

ஒழுக்கமுள்ளவனாக இருத்தல் என்பது நற்குடியிற் பிறந்துள்ளவன் என்பதற்கு அடையாளமாகும். அவ்வொழுக்கத்திலிருந்து தவறுதல் தாழ்ந்து இழிதொழில் பிறவியானவன் என்பதாக்கிவிடும்.

வ.சுப. மாணிக்கம்

விடா ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பு; ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு.

மணக்குடவர்

ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.

பரிமேலழகர்

ஒழுக்கம்-உடைமை குடிமை-எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்-அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ் வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். விளக்கம் (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்ததராவர் ஆகலின் 'குடிமையாம்' என்றும்; உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் 'இழிந்த பிறப்பாய் விடும்' என்றும் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ் விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.)

கலைஞர் மு. கருணாநிதி

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்