அதிகாரம் / Chapter 130

திருக்குறள் 1295

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு. இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.

பரிமேலழகர்

வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது. பெறாமை அஞ்சும் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று. விளக்கம் (காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும், 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.)

English explanation

I fear I shall not gain, I fear to lose him when I gain;And thus my heart endures unceasing pain

My soul fears when it is without him; it also fears when it is with him; it is sub ject to incessant sorrow.