அதிகாரம் / Chapter 118

திருக்குறள் 1179

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.

பரிமேலழகர்

'நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன - ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய. விளக்கம் ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்.)

English explanation

When he comes not, all slumber flies; no sleep when he is there;Thus every way my eyes have troubles hard to bear

When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.