அதிகாரம் / Chapter 116
திருக்குறள் 1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்புன்கண் உடைத்தால் புணர்வு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நங்காதலரை வரவு பார்த்திருக்குமது இன்பத்தை யுடைத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு. பிரிவாரோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்து.
பரிமேலழகர்
பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்ப முடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புண் கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது. விளக்கம் ('பார்வல்' என்றதனால், புணர்ச்சிபெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப் பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, ''முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந்தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்'' (கலித்.பாலை. 3) பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதற் குறிப்புக் காட்டி அச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.)
English explanation
It once was perfect joy to look upon his face;But now the fear of parting saddens each embrace
His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.