அதிகாரம் / Chapter 116
திருக்குறள் 1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு. இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.
பரிமேலழகர்
'பிரிந்து கடிதின் வருவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல். விளக்கம் (தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்காலமெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன். இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.)
English explanation
If you will say, 'I leave thee not,' then tell me so;Of quick return tell those that can survive this woe
If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.