அதிகாரம் / Chapter 94

திருக்குறள் 937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின், அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்.

பரிமேலழகர்

காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். விளக்கம் ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.)

English explanation

Ancestral wealth and noble fame to ruin haste,If men in gambler's halls their precious moments waste

To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.