அதிகாரம் / Chapter 1

திருக்குறள் 9

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.

பரிமேலழகர்

கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத்தலை- எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள் விளக்கம் எண் குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலான உடையன எனவும் உரைப்பாரும் உளர். 'காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல' எனத் தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)

English explanation

Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,Who stands, like palsied sense, is to all living functions dead

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.