அதிகாரம் / Chapter 77

திருக்குறள் 768

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பகைவரைக் கொல்லுந் தகுதியும் அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் சேனையானது படையழகினால் பெருமைபெறும்.படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல்.இஃது அரசன் படையழகு அமைக்கவேண்டு மென்றது.

பரிமேலழகர்

தானை-தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும்-பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன் மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும்-தன் தோற்றப் பொலிவானே பெருமை எய்தும். விளக்கம் ('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு. பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.)

English explanation

Though not in war offensive or defensive skilled;An army gains applause when well equipped and drilled

Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.