அதிகாரம் / Chapter 69
திருக்குறள் 682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.
பரிமேலழகர்
அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. விளக்கம் [ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே, அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகையார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.]
English explanation
Love, knowledge, power of chosen words, three things,Should he possess who speaks the words of kings
Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.