அதிகாரம் / Chapter 7

திருக்குறள் 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் விளக்கம்

சாலமன் பாப்பையா

பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்

English explanation

To patent sweet the touch of children dear;Their voice is sweetest music to his ear

The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

மேலும் தமிழ் உரைகள்

மு. வரதராசனார்

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

திருக்குறளார் வீ. முனிசாமி

ஒருவனுடைய உடம்புக்கு இன்பமாவது தனது மக்களுடைய உடம்பினைத் தொடுதலாகும். அவர்களுடைய சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பமாகும்.

வ.சுப. மாணிக்கம்

குழந்தை மேனிபடுவது உடலுக்கு இன்பம்; மழலைச் சொல் கேட்பது காதுக்கு இன்பம்.

மணக்குடவர்

தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.

பரிமேலழகர்

உடற்கு இன்பம் மக்கள் மெய் தீண்டல்-ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல்-செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். விளக்கம் ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுபடச் 'சொல்' என்றார். 'தீண்டல்' 'கேட்டல்' என்னும் காரணப் பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.)

கலைஞர் மு. கருணாநிதி

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்