அதிகாரம் / Chapter 65
திருக்குறள் 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது. எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று.
பரிமேலழகர்
நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான். விளக்கம் ['நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வய்த்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.]
English explanation
A tongue that rightly speaks the right is greatest gain,It stands alone midst goodly things that men obtain
The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.