அதிகாரம் / Chapter 6
திருக்குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.
பரிமேலழகர்
புகழ் புரிந்த இல் இலேர்க்கு-புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை-தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறுபோல நடக்கும் பெருமித நடை இல்லை. விளக்கம் ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
English explanation
Who have not spouses that in virtue's praise delight,They lion-like can never walk in scorner's sight
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.