அதிகாரம் / Chapter 59

திருக்குறள் 586

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்துஎன்செயினும் சோர்விலது ஒற்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு.

பரிமேலழகர்

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து-முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்யுகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று -ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான். விளக்கம் (விரத ஒழுக்கம்-தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்கை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக் கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.)

English explanation

As monk or devotee, through every hindrance making way,A spy, whate'er men do, must watchful mind display

He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.