அதிகாரம் / Chapter 56
திருக்குறள் 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை; அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம். முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.
பரிமேலழகர்
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப் புகழ்கள்தாம் உளவாகா. விளக்கம் (விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் "இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக" (நாண்மணி 17) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி மன்னாவாம்: ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று. வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின், பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.)
English explanation
To rulers' rule stability is sceptre right;When this is not, quenched is the rulers' light
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.