அதிகாரம் / Chapter 51
திருக்குறள் 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் விளக்கம்
சாலமன் பாப்பையா
ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
English explanation
Weigh well the good of each, his failings closely scan,As these or those prevail, so estimate the man
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.
மேலும் தமிழ் உரைகள்
மு. வரதராசனார்
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
திருக்குறளார் வீ. முனிசாமி
ஒருவனுடைய குணங்களையும் ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து அந்த இரண்டு வகைகளிலும் மிக்கவற்றை ஆராய்ந்து, அந்த மிக்கவற்றைக் கொண்டு அவனை அறிந்து கொள்ளல் வேண்டும்.
மணக்குடவர்
ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்க.
பரிமேலழகர்
குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து; குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து; மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக. விளக்கம் [மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவை யாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே யுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.]
கலைஞர் மு. கருணாநிதி
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்