அதிகாரம் / Chapter 5
திருக்குறள் 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.
பரிமேலழகர்
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின்-ஒருவன் இல் வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும்-அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். விளக்கம் (நிரல்நிரை.இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.)
English explanation
If love and virtue in the household reign,This is of life the perfect grace and gain
If the married life possess love and virtue, these will be both its duty and reward.