அதிகாரம் / Chapter 44
திருக்குறள் 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம் எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும். இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.
பரிமேலழகர்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்று வைக்குவை போல அழிந்து விடும். விளக்கம் ('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி. 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.)
English explanation
His joy who guards not 'gainst the coming evil day,Like straw before the fire shall swift consume away
The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.