அதிகாரம் / Chapter 44
திருக்குறள் 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம். இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.
பரிமேலழகர்
இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின் நீங்கிய மானமும்; மாணா உவகையும் - அளவிறந்த உவகையும்; இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம். விளக்கம் (மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார்; அஃதாவது, ''அந்தணர் சான்றோர் அருந்தவதோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவ"ரை (புறம். வெ.மா. பாடாண்-33) வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம்; பிறரும், "சினனே காமம் கழிகண்ணோட்டம்" என்றிவற்றை "அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது" (பதிற். 22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)
English explanation
A niggard hand, o'erweening self-regard, and mirthUnseemly, bring disgrace to men of kingly brith
Avarice, undignified pride, and low pleasures are faults in a king.