அதிகாரம் / Chapter 42
திருக்குறள் 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என்?
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
பரிமேலழகர்
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்; அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன? விளக்கம் (செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருள்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து; பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். 'வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும் கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
English explanation
His mouth can taste, but ear no taste of joy can give!What matter if he die, or prosperous live
What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?