அதிகாரம் / Chapter 41
திருக்குறள் 406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர். இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.
பரிமேலழகர்
கல்லாதவர் - கல்லாதவர்; உளர் என்னும் மாத்திரையார் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர். விளக்கம் (களர் தானும் பேணற்பாடு அழிந்து, உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத், தாமும் நன்று மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.)
English explanation
'They are': so much is true of men untaught;But, like a barren field, they yield us nought
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.