அதிகாரம் / Chapter 34
திருக்குறள் 339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
பரிமேலழகர்
சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் -அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு 'ஒக்கும். விளக்கம் (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)
English explanation
Death is sinking into slumbers deep;Birth again is waking out of sleep
Death is like sleep; birth is like awaking from it.