அதிகாரம் / Chapter 34
திருக்குறள் 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
பரிமேலழகர்
குடும்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து, உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. விளக்கம் ('தனித்து ஒழிய' என்றதனான், முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும் ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்: அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள் உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும் உளவேனும்,புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு' என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடும்பை' என்பதற்குக் கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன் தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல் உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.)
English explanation
Birds fly away, and leave the nest deserted bare;Such is the short-lived friendship soul and body share
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.