அதிகாரம் / Chapter 24
திருக்குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது. இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.
பரிமேலழகர்
நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும்; உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும்; வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. விளக்கம் ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய், பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று, 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது, புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூத உடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது, புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால் அரிது' என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.)
English explanation
Loss that is gain, and death of life's true bliss fulfilled,Are fruits which only wisdom rare can yield
Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.