அதிகாரம் / Chapter 24
திருக்குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன் றில்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.
பரிமேலழகர்
ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால் - தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. விளக்கம் (இணை இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழது சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
Save praise alone that soars on high,Nought lives on earth that shall not die
There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.