அதிகாரம் / Chapter 18

திருக்குறள் 180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும். இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.

பரிமேலழகர்

எண்ணாது வெஃகின் இறல் ஈனும்-பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வெளவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும்-அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். விளக்கம் (பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல் ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டிய உழல்வோர் யாவரையும் கீழ்ப்படுத்தலின், 'விறல் ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகுபெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.)

English explanation

From thoughtless lust of other's goods springs fatal ill,Greatness of soul that covets not shall triumph still

To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.