அதிகாரம் / Chapter 113
திருக்குறள் 1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.
பரிமேலழகர்
இதுவும் அது. காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து. விளக்கம் (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை?' என்பது குறிப்பெச்சம்.)
English explanation
My love doth ever in my eyes reside;I stain them not, fearing his form to hide
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.