அதிகாரம் / Chapter 108

திருக்குறள் 1073

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கயவர் தேவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.

பரிமேலழகர்

தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். விளக்கம் (உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.)

English explanation

The base are as the Gods; they tooDo ever what they list to do

The base resemble the Gods; for the base ac t as they like.