அதிகாரம் / Chapter 96

திருக்குறள் 953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு அங்கமென்று சொல்லுவர்.

பரிமேலழகர்

வாய்மைக் குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும், 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.)

English explanation

The smile, the gift, the pleasant word, unfailing courtesyThese are the signs, they say, of true nobility

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.