அதிகாரம் / Chapter 90

திருக்குறள் 897

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின். எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின.

பரிமேலழகர்

தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? விளக்கம் (உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.)

English explanation

Though every royal gift, and stores of wealth your life should crown,What are they, if the worthy men of mighty virtue frown

If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?