அதிகாரம் / Chapter 80

திருக்குறள் 799

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்: அவர் கொல்லுமதனினும். இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.

பரிமேலழகர்

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும், உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும். விளக்கம் (நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடீதாம் எனக் கைவீடு எண்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்,' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.)

English explanation

Of friends deserting us on ruin's brink,'Tis torture e'en in life's last hour to think

The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.