அதிகாரம் / Chapter 71
திருக்குறள் 707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும். குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.
பரிமேலழகர்
உவப்பினும் காயினும் தான் முந்துறும்-உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ-முகம் போல அறிவு மிக்கது பிறிது உண்டோ? இல்லை. விளக்கம் ('உயிர்க்கே அறிவுள்ளது; ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருதியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.)
English explanation
Than speaking countenance hath aught more prescient skill?Rejoice or burn with rage, 'tis the first herald still
Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.