அதிகாரம் / Chapter 61

திருக்குறள் 605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம். காமக்கல னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போலவென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.

பரிமேலழகர்

மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் - மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக் கலன் - இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம். விளக்கம் (முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது. நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின், மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல், இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி, அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்,' என்னும் உவமைக்குறிப்பு 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)

English explanation

Delay, oblivion, sloth, and sleep: these fourAre pleasure-boat to bear the doomed to ruin's shore

Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.