அதிகாரம் / Chapter 53
திருக்குறள் 523
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் விளக்கம்
சாலமன் பாப்பையா
சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.
English explanation
His joy of life who mingles not with kinsmen gathered round,Is lake where streams pour in, with no encircling bound
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.
மேலும் தமிழ் உரைகள்
மு. வரதராசனார்
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி
சுற்றத்தாருடன் நெஞ்சு கலந்து பழகுதல் இல்லாதவனுடைய வாழ்க்கையானது குளத்தின் பரப்பானது இருக்க வேண்டிய கரையில்லாமல் நீர் நிறைந்தது போலாகும்.
மணக்குடவர்
கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை, குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும். இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.
பரிமேலழகர்
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதவன் வாழ்க்கை; குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்தற்று - குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும். விளக்கம் [சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகு பெயர். 'வாழ்க்கை' எனறதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை, 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான் செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.]
கலைஞர் மு. கருணாநிதி
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்