அதிகாரம் / Chapter 42

திருக்குறள் 414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கற்கமாட்டானாயினுங் கேட்க: அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்குத் தாங்கலாவதொரு துணையாம். இது கேள்வி வேண்டுமென்றது.

பரிமேலழகர்

கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான். விளக்கம் ('உம்மை' கற்க வேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.)

English explanation

Though learning none hath he, yet let him hear alway:In weakness this shall prove a staff and stay

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.