அதிகாரம் / Chapter 39
திருக்குறள் 385
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான். பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.
பரிமேலழகர்
இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும்; ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும்; காத்தலும் - தொகுத்தவற்றை பிறர் கொள்ளாமல் காத்தலும்; காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும்; வல்லது அரசு - வல்லவனே அரசன். விளக்கம் (ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, 'இயற்றல்' என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. (பொருள்களாவன; மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன; பகைவரை அழித்தலும், திறை கோடலும், தன் நாடு தலையளித்தலும் முதலாயின. 'பிறர்' என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினார். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்; யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும்; மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலிய தவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார். இவை நான்கு பாட்டானும் மாட்சியே கூறப்பட்டது.)
English explanation
A king is he who treasure gains, stores up, defends,And duly for his kingdom's weal expends
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.