அதிகாரம் / Chapter 39

திருக்குறள் 381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன். ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.

பரிமேலழகர்

படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான்-படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன்; அரசருள் ஏறு - அரசருள் ஏறு போல்வான். விளக்கம் (ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை; 'கூழ்' என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்பதே முறையாயினும், ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரச நீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப் பெயர் கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு. இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவை முற்றும் உடைமையே அவன் வெற்றிக்கு ஏது என்பதூஉம் கூறப்பட்டன.)

English explanation

An army, people, wealth, a minister, friends, fort: six things-Who owns them all, a lion lives amid the kings

He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.