அதிகாரம் / Chapter 37

திருக்குறள் 366

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் விளக்கம்

சாலமன் பாப்பையா

ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

English explanation

Desire each soul beguiles;True virtue dreads its wiles

It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.

மேலும் தமிழ் உரைகள்

மு. வரதராசனார்

ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

திருக்குறளார் வீ. முனிசாமி

மெய்யுணர்தல் முதலியன எல்லாம் எய்தி அவற்றால் வீடு எய்தற்குரிய ஒருவனை வஞ்சனையால் புகுந்து வீழ்த்தவல்லது, ஆசையேயாகும். ஆதலால், அந்தண் அவாவினை அஞ்சிக் காப்பதே துறவறமாகும்.

மணக்குடவர்

ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம். வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.

பரிமேலழகர்

ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை, மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்கவல்லது அவர்; அஞ்சுவதே அறன்-ஆகலான், அவ்வவாவை அஞ்சி காப்பதே துறவறமாவது. விளக்கம் ('ஓரும்' என்பன அசைநிலை. அநாதியாய்ப் போந்த அவா, ஓரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின், அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது, வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம் என்பதூஉம் கூறப்பட்டன.)

கலைஞர் மு. கருணாநிதி

ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்