அதிகாரம் / Chapter 37
திருக்குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் விளக்கம்
சாலமன் பாப்பையா
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
English explanation
The wise declare, through all the days, to every living thingThat ceaseless round of birth from seed of strong desire doth spring
(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.
மேலும் தமிழ் உரைகள்
மு. வரதராசனார்
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
திருக்குறளார் வீ. முனிசாமி
எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாமல் வருகின்ற பிறப்பினை உண்டாக்கும் வித்து அவா (ஆசை) என்று நூலோர் சொல்லுவர்.
மணக்குடவர்
எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.
பரிமேலழகர்
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும்வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து; அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக் கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் 'பிறப்பினும் வித்து' என்றும், கதிவயத் தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறுபடாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்' என்றும், இஃது எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்றும் கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல் கூறப்பட்டது.)
கலைஞர் மு. கருணாநிதி
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்