அதிகாரம் / Chapter 33

திருக்குறள் 325

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.

பரிமேலழகர்

நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும்; கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாம் நிலைமை. விளக்கம் (துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால் பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார். இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.)

English explanation

Of those who 'being' dread, and all renounce, the chief are they,Who dreading crime of slaughter, study nought to slay

Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.