அதிகாரம் / Chapter 1
திருக்குறள் 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.
பரிமேலழகர்
மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய் வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார் விளக்கம் (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின், 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும், ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி, இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல். சொல். வினை. 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றவாரும் உளர். சேர்தல்-இடைவிடாது நினைத்தல்.)
English explanation
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gainIn bliss long time shall dwell above this earthly plain
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.